தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள ஏலகிரியான்கொட்டாய் சந்திப்பு சாலை இடையே சேலம் - பெங்களூர் 4-வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சந்திப்பு சாலையை ஒட்டி உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாலம் அமைக்கும் இடத்தை ஒட்டி சிறிது தூரத்தில் உள்ள ஏலகிரியான்கொட்டாய் முதல் முண்டாசு புறவடை இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலையை தற்போது அடைக்கப்பட்டு, உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்து வருகிறது.
இதனால் முண்டாசு புறவடை, பொத்தலான்கோட்டை, வேட்டராயன்கொட்டாய், ஏலகிரியான்கொட்டாய், திருநங்கை குடியிருப்பு சேர்ந்தவர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பு மக்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், ஒரு கிலோமீட்டர் தொலைதூரம் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது. ஏலகிரியான்கொட்டாய் சந்திப்பு சாலைப் பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு ஏற்றவாறு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி கிராம மக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர். கிராம மக்கள் கோரிக்கை மீது, மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல், மேம்பாலம் அமைக்கும் பணியை மட்டும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த, அப்பகுதி குடியிருப்பு மக்கள் மற்றும் திருநங்கை குடியிருப்பு வாசிகள் ஒன்றிணைந்து, ஏலகிரியான்கொட்டாய் தேசிய நெடுஞ்சாலை பிரிவு ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட முயன்றனர். அங்கு தர்மபுரி டிஎஸ்பி சிவராமன் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார், மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள், 9 திருநங்கைகள் உட்பட 80-பேரை கைது செய்து, போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்று, நல்லம்பள்ளியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். தேசிய நெடுஞ்சாலைக்கிடையே சுரங்கபாதை கேட்டு, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போலி சீட்டு நிறுவனங்கள், அனுமதி பெறாத நிதி நிறுவனங்கள் மற்றும் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டும் நபர்களிடம் ஏமாறாமல், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு, மாவட்ட கலெக்டர் சரவணன், தெரிவித்துள்ளார்.