திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, ஆதார் கைரேகையை பயன்படுத்தி தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.11,200 எடுக்கப்பட்டதாகவும், அந்தப் பணம் தனக்கு வழங்கப்படவில்லை எனவும் கூறி 100 நாள் வேலைத்திட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
வாணியம்பாடி தாலுகா வள்ளிப்பட்டு கிராமம் குட்டக்கொல்லி பகுதியைச் சேர்ந்த செல்வி பொன்னுரங்கம் என்பவர் அளித்துள்ள மனுவில், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 100 நாள் வேலை செய்ததற்கான பணத்தை எடுப்பதற்காக வள்ளிப்பட்டு செந்தமிழ் இ-சேவை மையத்திற்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
அங்கு இ-சேவை மையத்தை நடத்தி வரும் தமிழரசனிடம், ஆதார் கைரேகை மூலம் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துத் தருமாறு கேட்டதாகவும், கைரேகை வைத்த பின்னர் “பணம் வரவில்லை” என அவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால், அன்று தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.9,100 எடுக்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், பிப்ரவரி 16-ஆம் தேதி மீண்டும் அதே இ-சேவை மையத்திற்கு சென்று கைரேகை வைத்து பணம் எடுக்க முயன்றபோது, தனது கணக்கில் இருந்து மேலும் ரூ.2,100 எடுக்கப்பட்டதாகவும், அப்போதும் பணம் வரவில்லை எனக் கூறி தன்னை அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வங்கிக்கு சென்று கணக்கை சரிபார்த்தபோது, ஆதார் கைரேகை மூலம் இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ.11,200 எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தமிழரசனிடம் கேட்டபோது, தான் பணம் எடுக்கவில்லை என்றும், இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியதாக செல்வி பொன்னுரங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதேபோல் இ-சேவை மையத்தில் மேலும் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இ-சேவை மையத்தை நடத்தி வருபவர் மீது உரிய விசாரணை நடத்தி, தனது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.11,200-ஐ மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆதார் கைரேகை மூலம் பணம் எடுக்கப்பட்டதாக எழுந்துள்ள இந்தப் புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.