காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் எதிர்கால ஆய்வுகளுக்கான மையம் சார்பில் "நிலையான வளர்ச்சிக்கான பசுமை தொழில்முனைவு" குறித்த 3 நாள் பயிற்சி திட்டம் நடந்தது.
முதல் நாள் பயிற்சி மதுரை புல்லுத்து பகுதியில் உள்ள அரோலா நிறுவனத்தில் நடந்தது. இதில் வள நபர் சுதாகர் செல்வராஜ் மூங்கிலை கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் தயாரிக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.
2-ம் நாள் நிகழ்ச்சியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக திட்ட விஞ்ஞானி ரங்கேஷ், காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், எல் நினோ, வெள்ளம், வறட்சி, கடல் மட்ட உயர்வு குறித்து சிறப்புரையாற்றினார்.
3-ம் நாள் காந்திகிராம பல்கலைக்கழக வெள்ளி விழா அரங்கில் "கழிவுகளை கையாளும் முறைகள்" குறித்த பயிலரங்கம் நடந்தது. இதில் சுற்றுச்சூழல் கல்வியாளர் ராஜமாணிக்கம், திடக்கழிவு மேலாண்மை, கழிவுகளை பிரித்தெடுத்தல், மறுசுழற்சி குறித்து விளக்கினார்.
எதிர்கால ஆய்வுகள் மைய இயக்குனர் (பொறுப்பு) தேவகி வழிகாட்டுதலில், உதவி பேராசிரியர்கள் தேவி அவையரசி, சந்திரமோகன், சொர்ணலதா ஒருங்கிணைப்பில் இப்பயிற்சி நடந்தது. கல்வித்துறை தலைவர் ஸ்ரீதேவி சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான மாணவர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.