சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்…

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்…

கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டத்தில் தீர்மானங்கள்.

கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் பன்னீர்செல்வம் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் S. வேணுகோபால் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தமிழ்செல்வன் வரவேற்றார். சங்கச் செயலாளர் M. தேவேந்திரன் ஆண்டு அறிக்கையையும், பொருளாளர் T.R. ரவீந்திரன் வரவு–செலவு கணக்கையும் தாக்கல் செய்தனர்.

கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் 12 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக S. வேணுகோபால், செயலாளராக M. தேவேந்திரன், பொருளாளராக T.R. ரவீந்திரன், துணைத் தலைவராக M. பழனிச்சாமி (எ) செல்வன், துணைச் செயலாளராக R. பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகக் குழு உறுப்பினர்களாக V. சந்திரசேகர், A. செல்வராஜ், L. யோக நரசிம்மமூர்த்தி, C. ஜீவா, P. ராமமூர்த்தி, P. ராஜேஷ் குமார், P. திருஞானசம்பந்தம் B.Sc., B.L. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் முன்னாள் நீதியரசர் S.P. ரிஷிவரதன், V. செங்கடேஷ் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் முன்னாள் கோட்டப் பொறியாளர் G. மனுநீதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அவர்கள் பேசும்போது சாலை பாதுகாப்பை பொறுத்தவரை தனிமனித ஒழுக்கமே விபத்துகளை குறைக்க முடியும். இந்திய அளவில் அதிக விபத்துக்கள் நடக்கும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கோவையில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. தற்போது போக்குவரத்து விதிமுறைகளுக்கான அபராதங்கள் அதிகரிக்கப்பட்டு இருந்தாலும் ஆனால் விபத்துக்கள் குறைந்தபாடில்லை அதன் குற்றங்கள் குறைந்தபாடில்லை. வெளிநாடுகளில் புதிதாக ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்பட்டால் அதன் நடைமுறைக்கு வருவதில் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன தாமதமாகின்றன என்றனர்.

கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள், நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகி நல்லகண்ணு, சினிமா இயக்குநர்கள் பாரதிராஜா, நடிகர் பாக்கியராஜ், பாடகி வாணி ஜெயராம், பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோருக்கு சங்கத்தின் சார்பில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

நாட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக சாலை ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைகள் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையினரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையோர கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோவை ரயில் நிலையத்தில் ஆட்டோ, டாக்சிகளை ஒழுங்குபடுத்த கோரிக்கை

கோவை ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக ஆட்டோ மற்றும் டாக்சி வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சங்கம் தெரிவித்தது. இதனால் ரயிலில் பயணம் செய்ய வரும் பொதுமக்கள் உரிய நேரத்தில் நிலையத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும், எனவே ரயில்வே துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய கோரிக்கை

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மேம்பாலங்களின் ஏறுமிடங்கள் மற்றும் இறங்குமிடங்களில் நெரிசல் அதிகரித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சேரன் நகர், ஐ.டி.ஐ., வெள்ளக்கிணறு பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகர போக்குவரத்து காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

துடியலூர் வட்டச்சாலையில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை

துடியலூர் வட்டச்சாலை பகுதியில் ஏராளமான துணிக்கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் துடியூரில் பேருந்து நிலையம் வர உள்ளதால் எதிர்காலத்தில் நெரிசல் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், இதனைத் தடுக்கும் வகையில் துடியலூர் வட்டச்சாலையில் ரவுண்டானா அமைத்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நரசிம்மநாயக்கன்பாளையம் “யூ-டர்ன்” குறித்து எதிர்ப்பு

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள “யூ-டர்ன்” வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துவதாக சங்கம் தெரிவித்தது. 500 மீட்டர் இடைவெளியில் இரண்டு யூ-டர்ன்கள் இருப்பதால் வாகனங்கள் திடீரென திரும்பும்போது விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே யூ-டர்ன்களுக்கு இடையே உரிய இடைவெளி கடைப்பிடிக்கவும், பேருந்து நிறுத்தத்தை 50 மீட்டர் தள்ளி மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சாலைகளில் தோண்டப்படும் குழிகளை உடனடியாக மூட கோரிக்கை

கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்படும் குழிகள், பணிகள் முடிந்த பிறகு முறையாக மூடப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த குழிகளால் விபத்துகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், எனவே தோண்டப்படும் குழிகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சங்கம் தெரிவித்தது.

கோவை–சத்தி சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற கோரிக்கை

கோவை–சத்தி சாலையில் சரவணம்பட்டியில் இருந்து சிவானந்தம், அத்திப்பாளையம் பிரிவு, லட்சுமி, ஹோப்மார்க்கெட், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகள் வரை கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக சங்கம் தெரிவித்தது. இதனை கருத்தில் கொண்டு கோவை–சத்தி சாலையை 6 வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என்றும், கோவையிலிருந்து சரவணம்பட்டி வரையிலான சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை உடனடியாக அகலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோவை–அவிநாசி, கோவை–திருச்சி சாலைகளில் மேம்பாலங்கள் குறித்து அதிருப்தி

கோவை–அவிநாசி மற்றும் கோவை–திருச்சி சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டும், போக்குவரத்து நெரிசல் குறையவில்லை என சங்கம் தெரிவித்தது. குறிப்பாக உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் குறுகிய அளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் ஓவர்டேக் செய்ய முயன்று விபத்துகளில் சிக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைத்துறையினரின் சரியான திட்டமிடல் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கும் விபத்துகளுக்கும் காரணமாக இருப்பதாக சங்கம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

சாலை பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy