இந்தியாவின் பல்வேறு ஐ.ஐ.டி.களில் மாணவர் தற்கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் மனநலத்தை மேம்படுத்துவதற்காகச் சிறப்புப் பணியாளர் பிரிவை உருவாக்குவது குறித்து ஐ.ஐ.டி. நிர்வாகங்கள் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இந்தத் திட்டம் சமீபத்திய தற்கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்டதல்ல என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பரிசீலனையில் இருந்து வருவதாகவும் ஐ.ஐ.டி. இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஐ.ஐ.டி. நிர்வாகங்கள் ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இருப்பினும், சமீபத்திய தற்கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மாணவர்களின் போராட்டங்கள் எழுந்துள்ளதால், மனநலப் பாதுகாப்பு மற்றும் தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய ஆலோசனைகள் மற்றும் ஆதரவை வழங்குவதற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்குவது தற்போது அவசியமாகியுள்ளது.