கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ள ஆல்ப்ஸ் ஹோட்டல் பாரின் முதல் தளத்தில், கடந்த 20-ந் தேதி இரவு கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முகேஷ் குமார் என்பவர் தனது உறவினர் ரமேஷ்குமார் பட்டேலுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கும்பல், வீடியோ கால் மூலம் முகேஷ் குமாரை அடையாளம் காட்டி, அவரது தலையில் பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த முகேஷ் குமார், பெங்களூருவில் உள்ள நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா உத்தரவின்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் ஏ.டி. ராமச்சந்திரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தி, இந்த வழக்கில் தொடர்புடைய சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (27), சூரியா (25), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சூரியா (18), சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கவின் என்ற அட்டாக் கவின் (25) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சிலர் மீது ரவுடி சரித்திரப் பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் தர்மபுரி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் ஜி.டி. நித்திஷ் என்ற நித்திஷ் ஆகிய இருவரையும் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.